Friday, August 06, 2010

கருணாநிதி அரசின் மக்கள் விரோதப்போக்கு – எழுச்சிக் கூட்டம் : கருத்துரிமைக்கான கூட்டமைப்பு

தமிழ்நாடு அரசு வழங்கிய இலவச வண்ணத்தொலைகாட்சி மூலம் மானாட, மயிலாட நிகழ்ச்சி, சினிமா நிகழ்ச்சிகள், நெடுந்தொடர்கள் ஆகியவற்றை பார்த்து நாம் மகிழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் நமது கருத்துரிமை சத்தமின்றி களவாடப்படுவது உங்களுக்குத் தெரியுமா?

ஆதிக்க சக்திகளுக்கு எதிராக பெரியார் தலைமையில் கருத்துப் புரட்சியை தோற்றுவித்த திராவிட இயக்கத்தின் இன்றைய வாரிசான திராவிட முன்னேற்றக் கழகம்தான் மக்களின் கருத்துரிமைக்கு பெரும் சவாலாக விளங்குகிறது.

எந்த ஒரு ஆட்சியிலும் புறக்கணிக்கப்படும் மக்கள் பிரிவு, தங்கள் கோரிக்கைகளை ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்களுக்கு நினைவுறுத்துவதற்காக போராட்டங்களை நடத்துவதும், மக்கள் பிரசினைகள் குறித்து ஊடகங்களில் எழுதுவதும் தொன்று தொட்டு நடந்து வரும் நிகழ்வுகளே. இவை காமராஜர், அண்ணாதுரை ஆகியோர் ஆட்சிக்காலத்திலும் நடந்தவையே.

இன்று அரசு இயந்திரத்தால் புறக்கணிக்கப்படும் மக்கள், தங்கள் குறைகளை அரசின் கவனத்துக்கு கொண்டுவருவதற்காக நடத்தப்படும் சாதாரண நிகழ்வுகளைக்கூட அரசு அமைப்பின் கவனத்தைக் கவரும் அம்சமாக கருதுவதற்கு பதிலாக, ஆட்சியை கலைக்க நடக்கும் பயங்கரவாத சதித் திட்டமாக அரசும், ஆட்சியில் இருப்போரும் கருதுகின்றனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற ஜனநாயக நாடுகளில் நாடாளுமன்றத்திற்கு எதிரிலும், பிரதமர் இல்லத்தின் அருகிலும்கூட போராட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதை நாமும் தொலைக்காட்சிகள் மூலமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டிலோ ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஆளரவமே இல்லாத இடம் ஒதுக்கப்படுகிறது. அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தவும் அனுமதி மறுப்பதற்கு ஆயிரம் காரணங்களை கூறுகிறது காவல்துறை.

பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை எடுத்துக்கூறும் சுவரொட்டிகளை அச்சடிக்கும் அச்சகங்கள் மிரட்டப்படுகின்றன. இரவு நேரத்தில் சுவற்றில் ஒட்டப்படும் சுவரொட்டிகளை காவல்துறையும், உளவுத்துறையும் விடிவதற்குள் அகற்றுகிறது. சுவரொட்டி ஒட்டும் தொழிலாளர்களை மிரட்டியும், தாக்கியும் ஒடுக்குகிறது தமிழக காவல்துறை.


அரங்குகளுக்குள் நடத்தப்படும் கருத்தரங்குகளுக்கு காவல்துறையின் அனுமதி தேவையில்லை என்று சட்டம் அனுமதித்தாலும், அரங்கு உரிமையாளர்களை மிரட்டி அச்சுறுத்துவதன் மூலம் மக்களின் கருத்து சுதந்திரத்தை கட்டுப்பாட்டில் வைக்கிறது அரசு! செம்மொழி மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்பேசி மூலம் குறுந்தகவல் அனுப்பியவர்களைக்கூட பொய்வழக்கு மூலம் சிறையில் அடைத்தது தமிழக காவல்துறை.

அரசின், அதிகாரிகளின் ஊழல் முகத்தை வெளிக்கொணரும் பத்திரிகை ஆசிரியர்கள் கைது செய்யப்படுகின்றனர். வலைப்பதிவுகளில் எழுதும் வலைபதிவர்களையும் பொய்வழக்கில் சிக்கவைக்க காவல்துறை தயங்குவதில்லை.

மிகப்பெரிய தொழிற் சாலைகளை அமைக்கும்போது மக்களின் கருத்தறியும் சட்டரீதியான கூட்டங்களில்கூட மக்கள் தத் தம் கருத்துகளை வெளிப்படையாக கூறமுடியாமல் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலுவின் குடும்பத்தினருக்கு சொந்தமான வடசேரி எரிசாராய ஆலையில் நடந்ததுபோல குண்டர்களைக் கொண்டும், காவல்துறையினரைக் கொண்டும் கொடூரமாக ஒடுக்குகிறது தமிழக அரசு.

ஈழத்தமிழர்களின் இன்றைய அவலம் பற்றி யார் பேசினாலும் அவர்களை தேசத்துரோகிகள் என்று பட்டம் சூட்டும் தமிழக அரசு, சிங்கள பேரினவாத ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்படும் இந்திய-தமிழ் மீனவர்கள் குறித்து பேசிய சீமானை தேசப்பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் பூட்டுகிறது.

சுமார் 500க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் நடுக்கடலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் சாவுக்கு இலங்கை கடற்படையே காரணம் என்று தமிழக காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. ஆயினும் இந்த பிரசினையை தீர்ப்பதற்கு மாநில அரசோ, மத்திய அரசோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக மீனவர்களின் இந்த அவல நிலை குறித்து கேள்வி எழுப்புபவர்களை இந்திய இறையாண்மைக்கு எதிரானவாகளாக சித்தரிக்கின்றன மத்திய, மாநில அரசுகள். இது எந்த வகையில் நியாயம்?

சென்னை உயர்நீதிமன்றத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கண் எதிரிலேயே திமுக குண்டர்கள் வழக்கறிஞர்களை தாக்கியதையும், அதை படம்பிடித்த செய்தியாளர்கள் தாக்கப்பட்டதையும் ஒரு செய்தியாகக் கூட பதிவு செய்ய முடியாமல் ஊடகங்கள் விலை பேசப்படுகின்றன: அதற்கு மசியாத ஊடகங்கள் மிரட்டப் படுகின்றன.


திராவிட முன்னேற்றக் கழகமே ஆதரித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழ்! என்ற கோரிக்கையை வலியுறுத்தி அறவழிப்போராட்டத்தைக்கூட ஆட்சியை கவிழ்க்க முனையும் சதியாக நினைத்து ஒடுக்க முனைகிறது அரசு.

செய்தியாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக இயக்கத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரின் தொலைபேசிகளையும், பிற தகவல் தொடர்புகளையும் ஒட்டுக்கேட்பது போன்ற கண்காணித்தல் நடவடிக்கைகளால் அவர்களது இயல்பான, சுதந்திரமான நடவடிக்கைகளை முடக்கி தாக்குதலுக்கு உள்ளாக்கப் படுகின்றனர்.

போபால் விஷவாயு விபத்து குறித்து விவரணப்படங்களை மக்கள் கூடும் இடங்களில் திரையிடுவது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைக்கூட காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குகிறது.

முதல்வரையும், அவரது செயல்பாடுகளையும் போற்றிப்பாடும் கருத்துகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அரசு அமைப்புகளுக்கு எதிரான கருத்துகள் அனைத்தும் திட்டமிட்டு நசுக்கப்படுகின்றன.

குறளோவியம் படைத்தும், கன்னியாகுமரி கடற்கரையில் அய்யன் திருவள்ளுவருக்கு 133 அடி உயர உருவச்சிலை அமைத்தும் திருக்குறளின் புகழ் வளர்க்க முனையும் முதலமைச்சர் திரு. கருணாநிதி, அதே அய்யன் திருவள்ளுவரின்

“இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்”

என்ற திருக்குறளை மறந்து மக்களின் கருத்துரிமைக்கு வாய்ப்பூட்டு போடும் செயலை தொடர்ந்து செய்து வருகிறார்.

தமிழக அரசின் இந்தப்போக்கு எதிர் கட்சிகளுக்கும், செய்தியாளர்களுக்கும், பேச்சாளர்கள் எழுத்தாளர்கள் கலைஞர்களுக்கு மட்டுமே எதிரான செயலல்ல! இது பொது மக்களின் கருத்துரிமைக்கு எதிராக அரசு தொடுக்கும் யுத்தம்.

அரசின் இந்த ஒடுக்குமுறைகளை சமூக ஒழுக்கம் நீங்கள் நினைத்தால், நாளை உங்களுக்கு ஏற்படும் பிரசினைக்காக நீங்கள் வீதியில் இறங்கி போராடத்துணியும்போது இதே ஒடுக்குமுறை உங்கள்மீதும் பாயும்.

No comments:

Post a Comment